பெட்டாலிங் ஜெயா: பிகேஆர் நிறுவனத் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறை வாசத்திலிருந்து இன்று விடுதலை ஆவார் என சொல்லப்பட்டு வந்த நிலை யில் அந்நடவடிக்கை தள்ளி வைக்கப் பட்டுள்ளது. ஓரினப் புணர்ச்சி வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அன்வார் அடுத்த மாதம் 8ஆம் தேதி விடுதலை ஆவார் என இதற்கு முன்பு கூறப்பட்டு வந்தது. கடந்த புதன்கிழமை நடந்த பொதுத் தேர்தலின் விளைவாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர், அன்வார் முன்கூட்டியே மே 15ஆம் தேதி (இன்று) விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவரை விடுதலை செய்ய மலேசியாவின் பொதுமன்னிப்பு சபை ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும். அதன் பின்னர் அரச மன்னிப்புக்கு விண்ணப் பிக்க வேண்டும். அதற்காக பொது மன்னிப்பு சபை நேற்று மாலை கூடும் என்று கூறப்பட்ட நிலையில் அக்கூட்டம் நாளைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. "பொது மன்னிப்பு சபை மே 16ஆம் தேதி (நாளை) கூடும் என பிரதமர் அலுவலகம் தெரிவிப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் காரண மாக அடுத்த அறிவிப்பு வரும் வரை அன்வாரின் விடுதலை தள்ளிப்போடப் பட்டுள்ளது," என பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் நேற்று ஓர் அறிக் கையில் தெரிவித்தார். முன்னதாக, பிகேஆர் துணைத் தலைவரும் அன்வாரின் மகளுமான நூருல் இஸா அரச மன்னிப்பு குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் இன்று நடக் கும் என்று கூறியிருந்தார்.

