கோலாலம்பூர்: சமூக ஊடகத்தில் தம்மை அவமதிப்போரை போலிசார் கைது செய்ய வேண்டும் என்பதில் தமக்கு உடன் பாடில்லை என மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். மகாதீரையும் இஸ்லாத்தையும் மிதமிஞ்சிய வகையில் அவமதிக்கும் தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி யது தொடர்பாக ஆடவர் ஒருவர் மீது அரசு சாரா அமைப்பு களின் பிரதிநிதிகள் புகார் தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் லங்காவி போலிசார் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தனர்.
இருப்பினும் புகார் செய்தவர்களின் பெயரை போலிசார் வெளியிடவில்லை. தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233ன் கீழ் அந்த ஆடவர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலிஸ் கூறியது. போலிஸின் இத்தகவல் வெளியானதும் பிரதமர் மகாதீர் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டார். "என்னைப் பற்றி குறைகூறுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனை நான் போலிசிடமே தெரிவித்திருக்கிறேன். நாடாளுமன்றம் கூடும் போது இதுதொடர்பான சட்டம் மறுஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அத்தகவலில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மகாதீரின் இக்கூற்றை அவரது கட்சியின் இளையர் பிரிவு தலைவர் சையத் சாதிக் வரவேற்றார். பிரதமர் தம் மீதான குறைகூறலை பாதுகாக்கிறாரே ஒழிய ஒடுக்கவில்லை என்று திரு சையத் தமது டுவிட்டரில் தெரிவித்தார். 14வது பொதுத் தேர்லுக்குச் சிறிது நாட்களுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் நிர்வாகத்தால் அவசரமாக நிறைவேற்றப்பட்ட பொய்ச் செய்தி சட்டம் மறுஆய்வு செய்யப்படும் என பதவி ஏற்றதும் மகாதீர் கூறினார்.

