ஷங்ஹாய்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர் பயிற்சியின் ஓர் அங்கமாக சீனாவின் ஆகாயப் படை அங்குள்ள எல்லைக்குட்பட்ட தீவுகளில் மற்றும் பவளப்பாறைகள் பகுதிகளில் அதிநவீன குண்டுவீச்சு விமானங்களைத் தரையிறக்கியுள்ளது. H=6K ரகத்தைச் சேர்ந்த குண்டுவீச்சு விமானங்களின் மூலம் நடைபெற்ற இந்தப் போர் பயிற்சியின் மூலம் கடல் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும் ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுகிறது. இந்தக் கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இப்பகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

