ரியாத்: பெண்ணுரிமை வழக்கறிஞர்கள் ஏழு பேரை சவூதி அரேபிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட இருக்கும் சில வாரங்களுக்கு முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கைக்கான காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படாத போதிலும் பெண்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் முயன்றதாகக் கூறப்பட்டது.
ஆனால், வெளிநாட்டு அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக சவூதி அரசாங்கச் செய்தி ஒளிவழி குறிப்பிட்டது. கைது செய்யப்பட்ட எழுவரில் இருவர் ஆண்கள். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை எதிர்த்தவர்களும் இவர்களில் அடங்குவர். அந்தத் தடை அடுத்த மாதம் 24ஆம் தேதி நீக்கப்பட உள்ளது.

