அணுவாயுத சோதனை இடத்தை தகர்த்தது வடகொரியா

அணுவாயுத சோதனை இடத்தை தகர்த்தது வடகொரியா

2 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியா அதன் அணுவாயுத சோதனை இடத்தை அனைத்துலக செய்தியாளர்கள் முன்னிலையில் நேற்று பின்னேரம் தகர்த்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த இடத்திலிருந்துதான் வடகொரியா இதற்கு முன்பு 6 அணுவாயுத சோதனைகளை மேற் கொண்டது. வடகொரியாவின் அணுவாயுதத் திட்ட வசதிகளில் மிகவும் முக்கியமான இடமாக அது கருதப்படுகிறது. ஆகக் கடைசியாக வட கொரியா அந்த இடத்திலிருந்து தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் திட்டமிட்டபடி வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசுவார் களா என்ற ஐயம் ஏற்பட்டுள்ள வேளையில் வடகொரியா அதன் அணுவாயுத சோதனை இடத்தை தகர்த்துள்ளது. இதற்கிடையே திரு டிரம்ப், இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா என்பது வரும் வாரம் நம் அனைவருக்குமே தெரியவரும் என்று கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து வடகொரியா அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சு நடத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் இந்த வார இறுதியில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஜோசப் ஹேஜின், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மீரா ரிச்சர்ட் உட்பட அமெரிக்கக் குழுவினர் இந்த வார இறுதியில் சிங்கப்பூர் செல்லவுள்ளனர். வடகொரியா அதன் அணு வாயுதங்களைக் கைவிட இன் னும் ஆயத்தமாகவில்லை என்ப தால் திட்டமிடப்பட்ட வடகொரியத் தலைவருடனான சந்திப்பு தாமதம் ஆக அதிக வாய்ப்புகள் இருப்ப தாக திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினார்.