வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பை ரத்து செய்ததை அடுத்து வடகொரியா அதன் வருத்தத்தை வெளிப்படுத்தி யுள்ளது. திரு டிரம்ப்பின் அந்த முடிவு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய வடகொரிய வெளியுறவு துணை அமைச்சர் கிம் கை குவான், திரு டிரம்ப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுநடத்த வடகொரியா தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
வடகொரியாவின் இந்த அறிவிப்பு கனிவான, பயன் அளிக்கும் அறிக்கை என்று திரு டிரம்ப் பாராட்டியுள்ளார். இது நீண்டகால வளப்பத்திற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் என்று நம்புவோம் என்றும் அதற்கான காலம் கனியும் என்றும் அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய் வதாக திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். பேச்சுவார்த்தைக்கு உகந்த சமயம் இதுவல்ல எனவும் திரு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். "சினம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.
வடகொரியத் தலைவரை சந்திப்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தென்கொரியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சோல் நகரில் அமைதி ஆர்வலர்கள் ஊர்வலமாகச் சென்றனர். படம்: ஏஎஃப்பி

