பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் நான்காம் மாடியில் தொங்கிக்கொண்டிருந்த நான்கு வயதுக் குழந்தையைக் காப்பாற்றிய மாலி நாட்டு ஆடவருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. திரு மமோடோ கசாமா என்ற 22 வயது ஆடவர், குழந்தையைக் காப்பாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. அதைக் கண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரன், அவரை அதிபர் மாளிகைக்கே வரவழைத்து பாராட்டினார்.
அத்துடன், தீயணைப்புப் படை யிலும் அவருக்கு வேலை காத்தி ருக்கிறது. தன்னுயிரைப் பொருட்படுத் தாது துணிச்சலாக வெறும் கைகளுடன் மளமளவெனத் தாவி நான்கு மாடி ஏறி திரு மமோடோ குழந்தையை மீட்பது காணொளி யில் தெரிகிறது. திரு மமோடோவின் செயலைக் கண்டோர், அவரே உண்மையான 'சிலந்தி மனிதன் (ஸ்பைடர்மேன்)' எனப் பாராட்டினர். கடந்த சனிக்கிழமை இரவு எட்டு மணியளவில் பாரிசின் வடக்குப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மளமளவெனத் தாவி நான்கு மாடிகள் ஏறி குழந்தையைக் காப்பாற்றிய மமோடோ கசாமாவை அதிபர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரன். படம், ஏஎஃப்பி

