கூச்சிங்: மலேசியாவின் அண் மைய தேர்தலில் தோல்வி அடைந்த தேசிய முன்னணி கூட்டணி யிலிருந்து சரவாக்கின் நான்கு கட்சிகள் விலகியுள்ளன. மலேசியாவின் ஆகப் பெரிய மாநிலமான சரவாக்கில் பிபிபி, பிஆர்எஸ், பிடிபி, எஸ்யுபிபி ஆகிய கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகி கபுங் கான் பார்டை சரவாக் (ஜிபிஎஸ்) எனப்படும் புதிய கட்சி தொடங்க ஒருமனதாக முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்பட்டது.
"தற்போது நாட்டின் அரசியல் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தீர ஆலோசித்து, பிரதிபலிப்புகளை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று சரவாக்கின் முதல் அமைச்சரும் பிபிபி கட்சியின் தலைவருமான அபாங் ஜொஹாரி துன் ஓபெங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய ஜிபிஎஸ் கூட்டணியைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப் பினர்கள் மத்திய நாடாளு மன்றத்தில் இருப்பர். சரவாக் மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 67 ஜிபிஎஸ் வசம் இருக்கும். இதன் கரணமாக நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 59ஆகக் குறையும்.
சரவாக்கின் ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கைகோத்து ஒற்றுமையைத் தெரிவித்தனர். நாட்டின் முன்னேற்றம், மாநில உரிமைகள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட இருப்பதாக சரவாக் முதல்வர் அபாங் ஹொஜாரி துன் ஓபெங் (முன்வரிசை நடுவில்) கூறினார்.
இந்த முடிவே சரவாக் மக்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். படம்: தி ஸ்டார்

