எத்தியோப்பியா குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய பிரதமர்

எத்தியோப்பியா குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய பிரதமர்

1 mins read
948b22bf-1768-472b-a269-388355769ad5
-

அடிஸ் அபாபா: எத்தியோப்பியா பிரதமருக்கு ஆதரவாக மக்கள் நேற்று நடத்திய பேரணிக் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் பலர் காயம் அடைந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அந்நாட்டுப் பிரதமர் உயிர் தப்பியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அகமட் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்துத் தலைநகர் அடிஸ் அபாபாவில் நேற்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் அபிய் அகமட், விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தார். மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்பி வைத்த நேரத்தில் மக்கள் கூட்டத்துக்கிடையில் குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய பிரதமர் பின்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார். இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று குறிப்பிட்ட அவர், இத் தாக்குதலில் சிலர் பலியானதாகக் கூறினார். போலிஸ் வாகனம் மீது சிலர் கையெறி குண்டுகளை வீசித் தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

பேரணிக் கூட்டத்தில் குண்டு வெடித்ததும் சிதறி ஓடும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்