கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மலேசிய மக்களின் ஆதரவு தன் மனதை நெகிழச் செய்திருப்பதாகக் கூறி யுள்ளார். தான் கைது செய்யப்பட்ட பிறகு கடந்த 24 மணி நேரத்தில் மக்களின் அமோக ஆதரவை தம்மால் பார்க்க முடிந்தது என்று திரு நஜிப் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் தன்னை கைது செய்தபோதும் நீதிமன்றத்தில் தன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்த பட்டபோதும் தன் மீது மக்கள் காட்டிய அமோக ஆதரவு மனதை தொட்டதாக திரு நஜிப் கூறியுள் ளார். திரு நஜிப் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் புதன்கிழமையன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பலர் அறிக்கை வெளியிட்டிருப்பது தன் மனதை நெகிழச் செய் திருப்பதாகவும் அவர் சொன்னார்.
திரு நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோர், கோலாலம்பூரில் உறவினர்களை சந்தித்தார். படம்: ராய்ட்டர்ஸ்

