அங்காரா: துருக்கிய அதிகாரிகளின் புதிய உத்தரவுப்படி, காவல்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், கல்வியாளர்கள் என 18,632 அரசாங்க ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவதாகக் குழுக்களுடன் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி பணி நீக்கத்துக்கான அவசர உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, 148 அரசாங்க ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் துருக்கியின் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகனை பதவியிலிருந்து அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதில் இருந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பணிநீக்கம் குறித்து அதிகாரிகளின் தொடர்பிலான 'கடைசி' நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள் அவசரகால நிலை இன்று அதிகாலையுடன் முடிவடையக்கூடும் எனக் கூறியுள்ளன.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து 110,000க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று வெளியான உத்தரவுப்படி பலர் பணிநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக மூன்று செய்தித்தாள் நிறுவனங்கள், ஒரு தொலைக்காட்சி ஒளிவளி உட்பட 12 சங்கங்கள் மூடப்பட்டுள்ளன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கையை 'அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவு' என்று குறிப்பிட்டுள்ளன.

