'கட்சித் தேர்தலில் அன்வாரை எதிர்த்து அஸ்மின் அலி போட்டியிடமாட்டார்'

1 mins read

கோலாலம்பூர்: பிகேஆர் எனும் கெஅடிலான் கட்சித் தேர்தலில், தலைவர் பதவிக்கு அன்வார் இப்ராகிம் போட்டியிடவிருக்கும் வேளையில் அவரை எதிர்த்து பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி போட்டியிடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் ஹில்மான் இதனை உறுதிப்படுத்தினார்.

திரு அஸ்மின் அலி எப்போதும் அன்வாருக்குப் பக்கபலமாக இருப்பாரே தவிர அவரை எதிர்த்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டார் என ஹில்மான் திட்டவட்டமாகக் கூறினார். இந்த முறையும் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கே அஸ்மின் போட்டியிடுவார் என அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்வரும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அன்வார் அறிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளாக கெஅடிலான் கட்சித் தலைவராக அன்வாரின் மனைவி வான் அசிசா இருந்து வருகிறார்.