1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் மலேசியா தேடி வரும் தொழிலதிபர் ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைதானா என்று மலேசியப் பிரதமர் மகாதீரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அந்தச் செய்தி உண்மையாக இருந்தால் தனக்கு மகிழ்ச்சி என்று கூறினார். எனினும் அது குறித்து தனக்கு இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் தனக்கு தெரிந்ததெல்லாம் ஜோ லோ ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறார் என்பதுதான் என்றும் திரு மகாதீர் கூறினார்.
"ஜோ லோ விரைவில் கைது செய்யப்படுவார் என்று நான் நம்புகிறேன்," என்றும் திரு மகாதீர் கூறினார். ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு தப்பிச்சென்ற ஜோ லோ அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் ஜோ லோ கைது செய்யப்பட்டிருந்தால் அவரை மலேசியாவுக்கு சீனா திருப்பி அனுப்பும் என்றும் திரு மகாதீர் கூறினார்.

