இந்தோனீசிய நிலநடுக்கத்தில் 14 பேர் மரணம்

இந்தோனீசிய நிலநடுக்கத்தில் 14 பேர் மரணம்

2 mins read
1e89a7f5-ba0c-4b90-a4a8-7862fce9da9b
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான லொம்போக் தீவுப் பகுதியை நேற்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும் 160க்கும் அதிகமானோர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் களில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவரும் அடங்குவார்.

சித்தி நூர் இஸ்மாவிடா என்ற மலேசியப் பெண் மலை ஏறுவதற்காக ரிஞ்சானி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கி இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக மலை ஏறுவதற்காக அந்தப் பெண்ணுடன் சென்றிருந்த கைருல் அஸிம் என்பவர் கூறினார். இந்தோனீசியா வின் தென்கிழக்கில் உள்ள லொம்போக் தீவில் அதிகாலை நேரத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளும் கட்டடங் களும் குலுங்கியதாக குடியிருப் பாளர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளைவிட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். அதற்குள் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த தாகக் கூறப்பட்டது. லொம்போக்கின் பிரபல நகரான மட்டாரம் என்னும் பகுதி யிலேயே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. வீடுகளைவிட்டு வெளியேறிய ஏராளமான மக்கள் நேற்று மாலை வரை தெருக்களிலும் திறந்த வெளியிலும் திரண்டிருந்த தாக பேரிடர் தடுப்பு முகவை பேச்சாளர் கூறினார்.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க தீவிரமாக முயன்று வருவதாக அவர் கூறினார். நிலநடுக்கம் பலமாக இருந்த தாகவும் குடியிருப்பாளர்கள் அனைவரும் பீதியில் வெளியில் ஓடிக்கொண்டிருந்ததாகவும் குடி யிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மின்சாரம் தடைபட்டு ஒரே இருட்டாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நிலநடுக்கம் உலுக்குவதற்கு முன்பு அப்பகுதியில் தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

லொம்போக் தீவுப் பகுதியில் நேற்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. படம்: ஏஎஃப்பி