மிரட்டல் பயன் தராது: அமெரிக்காவின் தீர்வை உயர்வுக்கு சீனா பதிலடி

மிரட்டல் பயன் தராது: அமெரிக்காவின் தீர்வை உயர்வுக்கு சீனா பதிலடி

1 mins read

தமது நாட்டில் இருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள பொருட்களுக்கு 25 விழுக்காடு தீர்வை விதிக்க அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவை சீனா கடுமையாகச் சாடியுள்ளது.

தீர்வை விதிக்கப்படுமானால் அதற்குப் பதிலடி தரப்போவதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கெங் ‌ஷுவாங் தெரிவித்து உள்ளார். மிரட்டல் ஒருபோதும் கைகொடுக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், வர்த்தகப் பூசல்களைத் தீர்க்க பெய்ஜிங் பேச்சுவார்த்தையிலேயே நாட்டம் காட்டி வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

நடப்பில் உள்ள பத்து விழுக்காடு தீர்வையை 25 விழுக்காட்டுக்கு உயர்த்தி அந்தப் புதிய தீர்வை விதிப்பை ஜூலை 10ஆம் தேதியே நடப்புக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம் கொண்டிருந்ததாக தீர்வை விதிப்புத் திட்டம் குறித்து நன்கு அறிந்த தகவல் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் உணவுத் தயாரிப்புகள், ரசாயனப் பொருட்கள், உலோகம், அலுமினியம் ஆகியவற்றோடு நாய் உணவு, தளவாடச் சாமான்கள், தரை விரிப்புகள், கார் சக்கரங்கள், மிதிவண்டிகள், அழகுச் சாதனப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பயனீட்டாளர் பொருட்களை இலக்காகக் கொண்டு தீர்வை உயர்வுத் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அது குறிப்பிட்டது.

இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வருகிறது. தீர்வையை உயர்வுத்தும் யோசனை குறித்த அறிவிப்பை அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் புதன்கிழமை வெளியிடக்கூடும் என்று சில தகவல்கள் கூறின. இது தொடர்பாக தகவல் புளூம்பெர்க் செய்தித்தளத்தில் முதன்முறையாக வெளியானது.