கோலாலம்பூர்: ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்ட சிலாங்கூர், சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் அத்தொகுதியை மீண்டும் கைப்பற்றியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இம்முறை இங்கு மும்முனைப் போட்டி நிலவியது. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முகம்மட் ஷவாவியும் தேசிய முன்னணி சார்பில் லோக்மான் நூர் மற்றும் சுயேச்சை வேட்பாளராக கே. மூர்த்தி ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டனர். இரவு 8 மணியளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பக்கத்தான் ஹரப்பான் வேட் பாளர் ஷவாவி 12,984 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் 7,774 வாக்குகள் பெற்றிருந்தார். சுயேச்சை வேட்பாளர் கே. மூர்த்தி 97 வாக்குகள் பெற்றிருந்தார். இன்னும் எண்ணப்படவேண்டிய வாக்குகள் 4,920 என்பதால் பக்கத்தானின் வெற்றியைத் தேசிய முன்னணியினால் தடுக்க முடியாது என்று கூறப்பட்டது.
இம்முறை வாக்குப் பதிவில் கணிசமான சரிவு ஏற்பட்டது. 51,217 வாக்காளர்களைக் கொண்ட இந்தச் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 51 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவானதாக கூறப்பட்டது. இந்தத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானுக்கும் அம்னோவுக்கும் இடையில் நடந்த கடும் போட்டியாகப் பார்க்கப்பட்டது. மலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.

