டாக்கா: பங்ளாதேஷில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்து வன்முறை வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கி வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர பங்ளாதேஷ் போலிசார் நடவடிக் கைகள் எடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டம் மோசமடையாமல் இருக்க திறன்பேசிகளுக்கான இணையச் சேவையை அந்நாட்டு அதிகாரிகள் துண்டித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட வேக வரம் பைத் தாண்டி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று கடந்த வாரம் இரண்டு கல்லூரி மாணவர்கள் மீது மோதியது. இதில் அந்த இரு மாணவர்களும் மாண்டனர். இந்தச் சாலை விபத்தால் ஏற்பட்ட மரணங்களால் பங்ளாதேஷ் கல்லூரி மாணவர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
பங்ளாதேஷில் உள்ள மோசமான சாலைப் பாதுகாப்புக்கு எதிராக தலைநகர் டாக்காவில் கல்லூரி மாணவர்கள் அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களிட்டனர். அத னால் அந்நகரின் இயல்புநிலை பாதிக்கப் பட்டது. நேற்று முன்தினம், டாக்காவின் ஜிகதலா வட்டாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலிசார், ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரி வித்தனர். இதைப் போலிசார் மறுத்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகளுக்கு எதிராக வலுத்து வரும் ஆர்ப்பாட்டங்களைக் காட்டும் படங்கள் பரவுவதை நிறுத்த திறன்பேசிக்கான இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

