வெள்ளத்தில் மிதக்கும் மணிலா

வெள்ளத்தில் மிதக்கும் மணிலா

2 mins read
8be04fc6-b5e6-4df0-a778-e808ebc4ee00
-

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும் அதனைச் சுற்றியிலுள்ள பகுதிகளிலும் கனத்த மழை பெய்ததில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதில் குறைந்தது 50,000 பேர் அந் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக உதவிக்குக் குரல் கொடுத்துள்ள வேளையில் வெள்ளத்தின் சேதம் 2009ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான 'கெட்சானா' சூறா வளியை நினைவுபடுத்துவதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டன. மரிகினா நகரில் மட்டும் அங்குள்ள ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந் துள்ளதால் குறைந்தது 21,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இதற்குப் பக்கத்தில் உள்ள ரிசால் மாகாணத்திலிருந்து 19,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் பேசிய மேயர் மர்சிலினோ டியோடோரோ, "எல்லா இடங்களிலும் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது," என்றார்.

வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் மூழ்கியுள்ள வேளையில் குடியிருப்பாளர்கள் மேற்கூரை மீது ஏறி உதவிக்காகக் காத்திருக்கின்ற னர். சில இடங்களில் வெள்ளம் மார்பளவுக்கு உயர்ந்துள்ளது என்று மணிலா நகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. மேலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப் பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. இயற்கை பேரிடரில் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று பிலிப்பீன்ஸ். ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட சூறாவளியை அது சந்தித்துவருகிறது. சென்ற 2009ல் 'கெட்சானா' சூறாவளியால் மணிலாவில் ஒரு மாதத்திற்கு மேல் மழை பெய்தது. அந்த சூறாவளியில் 462 பேர் இறந்தனர்.

மணிலாவின் தெற்கே ஹகனோய் நகரில் உள்ள தேவாலயத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் இந்தத் தம்பதியர் கவலை கொள்ளவில்லை. வாழ்க்கைப் பாதை கரடு முரடாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி இருவரும் மணம் புரிந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி