டாம்பா (புளோரிடா): சூரியனை மிக நெருக் கமாகச் சென்று ஆய்வு செய்வதற்காக 1.5 பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள செயற்கைக்கோளை நேற்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான 'நாசா' விண்ணில் பாய்ச்சியது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு மூலம் அபாயகரமான சூரிய சூறாவளியின் பின்னணி ஆராயப் படும். "மூன்று, இரண்டு, ஒன்று, லிஃப்ட்ஆஃப்," என்று நாசா கமாண்டர் எண்ணிக்கைகளை வரிசையாகக் கூறி முடித்ததும் 'பார்க்கர் சோலார் புரோப்' எனும் செயற்கைக்கோளை ஏந்தி 'டெல்டா IV' உந்துகணை விண்வெளியை நோக்கிப் பாய்ந்தது. ஆளில்லா இந்த செயற்கைக்கோள் இதுவரை இல்லாத அளவுக்கு சூரியனை நெருங்கி ஆய்வு செய்யும்.
ஏழு ஆண்டு பயணத்திற்குப் பிறகு சூரியனின் வளி மண்டலத்தில் நுழையும் அளவுக்கு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் 'சூரியனைத் தொடும்' முதல் செயற்கைக்கோள் என்று நாசா இதனை பெருமையாகக் குறிப்பிட்டுள்ளது. செயற்கைகோளை சூரியனின் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக மிகவும் சக்திவாய்ந்த வெப்பத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரியனின் மேற் பரப்பிலிருந்து 6.16 மில்லியன் கிலோ மீட்டர் அளவுக்கு நெருங்கி வியப்பான அதன் வளிமண்டலம், சூரிய சூறாவளி ஆகியவற்றை பற்றிய தகவல்களை அது பூமிக்கு அனுப்பிவைக்கும்.
சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் நேற்று பாய்ச்சப்பட்டது. படம்: ஏஎஃப்பி