பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்த அமெரிக்க ஊடகங்கள் பிரசாரம்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகங்களை கடுமையாக சாடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட அமெரிக்க செய்தித்தாட்கள் நேற்று பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் பிரசார இயக்கத்தை தொடங்கின. பாஸ்டன் குளோப், நியூயார்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் நேற்று வெளியிட்ட தலையங்கச் செய்தியில் பத்திரிகை சுதந்திரம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

பாஸ்டன் குளோப் நாளிதழ் வெளியிட்ட தலையங்கச் செய்தியில் பத்திரிகை சுதந்திரம் 200 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் முக்கிய கொள்கையாக இருந்து வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பொய்ச் செய்திகள் என்று கூறி வரும் திரு டிரம்ப், சில ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரிகள் என்று சாடி வருகிறார்.

திரு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் செய்தியாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பிரசார இயக்கத்தின் மூலம் ஊடகங்கள் எடுத்துரைத்துள்ளன.