ஜோக்கோவி: உள்கட்டமைப்பு மேம்பாடு இந்தோனீசியாவை ஐக்கியப்படுத்தும்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதால் புதிய பொருளியல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம் இந்தோனீசிய வட்டாரங்களுக்கு மதிப்பு மேலும் கூடும் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறினார். இந்தோனீசியா அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நேற்று நாடாளுமன்றத்தில் திரு விடோடோ உரையாற்றினார்.

புகழ் பெற்ற ஜாவா தீவில் மட்டுமன்றி சுமத்ராவிலிருந்து பாப்புவா வரை அத்தகைய மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஜோக்கோவி என்று அழைக்கப்படும் திரு விடோடோ கூறினார். அத்திட்டங்கள் யாவும் இந்தோனீசிய மக்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக அவர் கூறினார். சாலைகள் அமைத்தல், விமான நிலையம் கட்டுதல் போன்ற உள்ளமைப்பு வசதித் திட்டங்களை நம்மை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தின் முயற்சியாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.