லொம்போக்: இந்தோனீசியாவின் சுற்றுலாத்தலமான லொம்போக் தீவை மீண்டும் ஒரு வலுவான நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது. அத்தீவில் நேற்று ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக் கத்தைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததாக தேசிய பேரிடர் நிவாரண அமைப்பின் பேச்சாளர் சுடோபோ பூர்வோ கூறினார். வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களுக்கு ஓடியதாக வும் அவர் சொன்னார். சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்ற போதிலும் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்,
இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே லொம்போக் தீவுப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தில் ஏராளமான கட்ட டங்களும் வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சுமார் 350,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் லொம்போக் தீவை மீண்டும் ஒரு நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு லொம்போக்கில் பெலண்டிங் நகருக்கு தென்மேற்கில் மையம் கொண்டிருந்ததாகவும் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
லொம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்தன. வீடியோ படம்: ராய்ட்டர்ஸ்

