அமெரிக்காவுடன் பேச்சுநடத்த தலிபான் குழு விருப்பம்

அமெரிக்காவுடன் பேச்சுநடத்த தலிபான் குழு விருப்பம்

2 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றால் தங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலிபான் போராளிகள் குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி தலிபான் குழுவின் தலைவர் மவுலவி ஹைபதுல்லா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ் தானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கிற வரையில் அமைதிக்கு வழி இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்," எனக் கூறி உள்ளார். அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும் நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001ஆம் ஆண்டு அல் காய்தா பயங்கரவாத அமைப் பினர் விமானங்களை மோதித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து தலிபான்களுக்குப் புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து, தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் படைகளுக்கும் தலிபான் போராளிகளுக்கும் இடையே போர் மூண்டது. தொடர்ந்து 18வது ஆண்டாக அது நீடிக்கிறது. அண்மையில் ஒரு முக்கிய நகரைக் கைப்பற்ற தலிபான் போராளிகள் கடுமையாக சண்டையிட்டனர். இந்தச் சண்டையில் அரசாங்கப் படையினர் 100 பேரும், பொது மக்களில் 35 பேரும் பலியாகினர். ராணுவத்தினரையும் போலி சாரையும் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கானைவிட்டு நேட்டோ படை வெளியேறியது முதல் அங்கு தாக்குதல்கள் அதிகரித் துள்ளன.