பெய்ஜிங்: மலேசியா எதிர் நோக்கும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக சீனாவின் ஆதரவுடன் மலேசியாவில் மேற்கொள்ளப் படவிருந்த சில பெரும் திட்டங்கள் தற்போது ரத்து செய்யப்படுவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். சீனாவுடன் சேர்ந்து மலேசியா மேற்கொள்ளவிருந்த 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புத் திட்டம் மற்றும் இரண்டு எரிவாயு குழாய் இணைப்புத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திரு மகாதீர் கூறினார்.
இருப்பினும் இழப்பீடு வழங்கு வது உட்பட மற்ற விவரங்கள் பின்னர் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஐந்து நாள் சீனப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்கள் கூட்டத் தில் கலந்துகொண்ட அவர் இதுபற்றிக் கூறினார். "எங்கள் பிரச்சினையை சீனா புரிந்துகொண்டு, அத்திட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு இணக் கம் தெரிவித்தது," என்றும் மகாதீர் குறிப்பிட்டார். மலேசியா வின் கடன் சுமையைக் குறைப்பதுதான் தற்போதைய முதல் பணி என்றும் திரு மகாதீர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மலேசியாவில் கடந்த மே மாதம் நடத்த பொதுத் தேர்தலில் திரு மகாதீர் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் மீண்டும் மலேசியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். பிரதமராக அவர் பொறுப் பேற்றது முதல் அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்.

