ஐநாவின் குற்றச்சாட்டை நிராகரித்தது மியன்மார்

1 mins read

யங்கூன்: ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட இனப் படுகொலை காரணமாக மியன்மார் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ஓர் அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. ஐநாவின் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ள மியன்மார் அரசாங்கம் அக்குற்றச்சாட்டு தொடர்பில் ஐநா நிறைவேற்றும் தீர்மானங்களை ஏற்கப்போவ தில்லை என்று தெரிவித்துள்ளது. முன்னதாக சீனா, மியன்மாருக்கு நெருக்குதல் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப்போவதில்லை என்று கூறியது. மனித உரிமைகள் மீறப் பட்டதாக மியன்மார் ராணுவம் மீது கூறப்படும் குற்றச்சாட்டை சகித்துக்கொள்ள முடியாது என்று அரசாங்கப் பேச்சாளர் ஸாவ் டாய் கூறினார்.

மியன்மார் ராணுவத்தின் மீது ஐநா அமைப்புகள் மற்றும் அனைத்துலக குழுக்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிப்பட்ட விசாரணைக் குழுவை அரசாங்கம் அமைத்திருப்ப தாகவும் அவர் சொன்னார். மியன்மாரில் ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக ராணுவம் ஒடுக்குமுறையை பின்பற்றிய போது பலர் கொல்லப்பட்டனர். ரோஹிங்யா இனத்தவர் சுமார் 700,000 பேர் அங்கிருந்து தப்பிச்சென்று அருகில் உள்ள பங்ளாதே‌ஷில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.