யங்கூன்: மியன்மார் ராணுவம் சென்ற ஆண்டு ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக எடுத்த அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை மன்றத்தின் தலைவர் ஸிய்ட் ராட் அல் ஹுசேன் கூறினார். ராணுவத்தினரை மன்னிப் பதற்குப் பதிலாக திருவாட்டி சூச்சி பதவியிலிருந்து விலகி திரும்பவும் வீட்டுக்காவலில் இருப்பது குறித்து பரிசீலித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறி யுள்ளார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் ராணுவம் செய்த அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் உயர் ராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக் கையை ஐநா திங்கட்கிழமை வெளியிட்டது. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மூண்ட வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க திருவாட்டி சூச்சி தவறி விட்டதாகவும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் சூச்சி அம்மையார் இனப்படுகொலையைத் தடுக்க ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று திரு ஹுசேன் கூறினார். மியன்மார் ராணுவத்தின் பேச் சாளராக அவர் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சொன்னார்.
மியன்மார் ராணுவத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தி கூறப்பட்டவை என்று ஆங் சான் சூச்சி முன்பு கூறியதை திரு ஹுசேன் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் இனப் படுகொலை நோக்கத்தில் ரோஹிங்யா இன மக்கள் மீது மியன்மார் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ஐநா மனித உரிமை மன்றம் தெரிவித்த குற்றச் சாட்டுகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. ரோஹிங்யா விஷயத்தில் தாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்று மியன்மார் ராணுவம் கூறி வந்துள்ளது.

