வாஷிங்டன்: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டங்களைக் கைவிடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்று பரவலாக குறை கூறப்படும் வேளையில் இந்த விவகாரத்தில் சீனா அதன் பங்கை ஆற்றவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் களைய அதன் நட்பு நாடான சீனா முக்கிய பங்காற்ற முடியும் என்று கூறிவந்த திரு டிரம்ப் தற்போது சீனா மீது குறை கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பூசல் நீடிக்கும் வேளையில் சீனா மீது திரு டிரம்ப் அடுத்தடுத்து குறை கூறி வருகிறார்.
தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சியை இரு நாடுகளும் நிறுத்தி வைத்துள்ள நிலையில் இத்தகைய போர் பயிற்சிகளுக்கு அமெரிக்கா செலவு செய்யக்கூடாது என்று திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஆனால் அந்த ராணுவப் பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டால் என்றும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பயிற்சியாக அது இருக்கும் என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.

