தோக்கியோ: பெரிதளவில் பலமான சூறாவளி ஒன்று நேற்று ஜப்பானை நோக்கிச் செல்வதாக வானிலை நிறுவனம் தெரிவித்தது. 'டைஃபூன் டிராமி' என்று அழைக்கப்படும் இச்சூறாவளி, கடும்புயலுடனும் தொடர்மழையுட னும் இவ்வார இறுதியில் ஜப்பானை உலுக்கவிருக்கிறது என்றும் கூறப்பட்டது. சூறாவளியின் மையப்பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 162 கிலோமீட்டர் காற்று வேகம் பதிவானது. பசிபிக் பகுதியில் சுழன்று கொண்டிருந்த சூறாவளி ஜப்பானின் தென்தீவுகளை நோக்கி மெல்ல நகர்ந்த வண்ணம் இருந்தது. இதன் தொடர்பில் ஜப்பானிய மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் இரு முதன்மை விமான நிறுவனங்கள் நூற்றுக்கும் மேலான உள்நாட்டுச் சேவைகளை ரத்து செய்யத் தொடங்கிவிட்டன. எதிர்பார்க்கப்படும் அளவுக்கு இச்சூறாவளியின் தாக்கம் அமைந்தால், மீண்டும் பெரும் இயற்கைச் சீற்றத்தில் ஜப்பான் சிக்கக்கூடும். இதற்குமுன் நாட்டின் மேற்குப் பகுதிகளைத் தாக்கிய சூறாவளியில் 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் முதன்மை விமான நிலையமும் மூடப்பட்டது.

