இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து உருவான சுனாமியும் பலு நகரில் பெரும் நாசத்தை விளைவித்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடர்களுக்கு இதுவரை 384 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் 29 பேரைக் காணவில்லை என்றும் 540 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் டொங்காலா நகரை மீட்புப் பணியாளர்களால் சென்றடைய முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் மீட்புப் பணியாளர்கள் இன்னும் சென்று சேராததால் மாண்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. டொங்காலா, பலு நகரங்களிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கைபேசி சேவை முடங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்காக தொடர்புகொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. (படத்தில்) நிலநடுக்கத்தால் கடுமையாகச் சேதமடைந்த ஒரு கடைத்தொகுதியைக் கவலையோடு பார்க்கும் பல நகரவாசிகள். படம்: ஏஎஃப்பி

