சுலவேசியில் நில அதிர்வுகள்; தொடரும் மீட்புப் பணிகள்

2 mins read
b158c78a-160c-4e60-9d09-f3282f151774
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசி தீவை வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக் கிய நிலையில் நேற்று மட்டும் அங்கு கிட்டத்தட்ட 170 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் பேச்சாளர் சுடோபோ புர்வோ கூறியுள்ளார். நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலை தாக்கியதில் மத்திய சுலவேசியில் உள்ள பலு நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக மீட்புப் பணியாளர்கள் மிகவும் கவனத் துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

நில அதிர்வுகள் காரணமாக பேரங்காடி போன்ற பல கட்டட அமைப்புகள் ஆட்டம் காணும் சாத்தியம் உள்ளதால் மீட்புப் பணியாளர்கள் மிகவும் கவனத் துடன் எச்சரிக்கையான அணுகு முறையைப் பின்பற்றி வருகின்றனர். நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடு களில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் தங்கள் கைகளைப் பயன்படுத்தி இடிபாடு களை அகற்றி வருவதாக அங் கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலு நகரில் உள்ள ரோ-ரோ ஹோட்டல் இடிபாடுகளில் சிக்கி யிருந்த 24 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. அந்த ஹோட்டல் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களின் அழுகுரல் தொடர்ந்து கேட்பதாகவும் அவர்களைக் காப்பாற்ற கனரக நவீன சாதனங் கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.

மத்திய சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பலு நகரில் இடிந்து விழுந்த ஹோட்டல் இடிபாடுகளுக்கு இடையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர். படம்: ஏஎஃப்பி