ஜெனீவா (ராய்ட்டர்ஸ்): சிரியா வின் போராளிகளின் மீது ஈரான் தனது ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது. தென்மேற்கு ஈரானில் நடந்த ராணுவ அணிவகுப்பில் துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்து ஈரான் இவ்வாறு செய்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற சன்னி முஸ்லிம் போராளிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ஈரானின் புரட்சிக் காவ லர்களின் அதிகாரபூர்வ செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டது. ஈரா னியர்கள் பெரும்பாலோர் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். 1980களில் ஈராக்கை ஈரான் போரில் வீழ்த்தியதைக் கொண் டாடும் அந்த அணி வகுப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள், 570 கிலோமீட்டர் பறந்து தங்களது குறிகளின் மீது விழுந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். எதிரிகளின் தீய செயல்களுக்கு பதிலடிக் கொடுக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்தது. அஹ்வாஸ் என்ற பிரிவினைவாத கிளர்ச்சிப் படையும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்றனர். ஆயினும், இதற்கான ஆதாரத்தை இரண்டு அமைப்பினரும் வழங்க வில்லை. ஏழு ஆளில்லா வானூர்திகளையும் பயன்படுத்தி ஈரான் கிளர்ச்சியாளர்களின் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் மாண்டதுடன் அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டன.

