பெய்ஜிங்: காணாமல்போன அனைத்துலக காவல்துறையின் தலைவர் மெங் ஹோங்வெய்யை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகிறோம் என்று சீனா நேற்று முதல் முறையாக உறுதி செய்தது. ஊழல் தடுப்பு பிரிவு அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அது கூறியது. ஆனால் அதற்கான விவரம் தெரிவிக்கப்படவில்லை. சீனாவின் பொதுப் பாதுகாப்பு உதவி அமைச்சருமான திரு மெங் கடந்த மாதம் 25ஆம் தேதி ஃபிரான்சிலிருந்து சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது காணாமல் போனார்.
இந்நிலையில் திரு மெங் பதவி யிலிருந்து விலகி விட்டதாக அனைத்துலக காவல்துறையான 'இண்டர்போல்' தெரிவித்தது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய திரு மெங்கின் மனைவி கிரேஸ் மெங், காணாமல் போன நாளன்று கத்தி உருவப் படம் ஒன்றை தனது கணவர் சமூக ஊடகம் வழியாக அனுப்பி யிருந்தார் என்றார். சீனாவில் உயர் பதவி வகிப்ப வர்கள் காணாமல்போவது வாடிக் கையாகி வருகிறது. செப்டம்பர் மாதம் திரு மெங் காணாமல்போனார். கடந்த ஜூலை மாதம் இதே போன்று நடிகர் ஃபான் பிங்பிங் காணாமல் போனார். பின்னர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். வரி ஏய்ப்பு, இதர குற்றங் களுக்காக அவருக்கு 883 மில் லியன் யூவான்($129 மில் லியன்) அபராதம் விதிக்கப்பட்டது.
காணாமல்போன 'இண்டர்போல்' தலைவர் மெங் ஹோங்வெய் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை நேற்று சீனா உறுதிப்படுத்தியது. கோப்புப் படம்: இண்டர்போல்

