நாணய மதிப்பு குறித்து ஐஎம்எஃப் இணக்கம்

1 mins read

பாலி: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொருளியல் தலைவர்கள், போட்டிபோடும் நோக்கத்துடன் தங்களது நாணய மதிப்பைக் குறைப்பதை இனிமேல் தவிர்க்கப்போவதாக நேற்று உறுதி எடுத்துக்கொண்டனர். சரியான நிதிக்கொள்கைகள், வலுவான பொருளியல் அடித்தளம், மீள்திறன் கொண்ட அனைத்துலக நிதி அமைப்பு ஆகியவை நிலையான பணமாற்ற விகிதங்களுக்குப் பங்களிப்பதாக அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

பொருளியல் ரீதியான அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கு நீக்குப்போக்கான பணமாற்ற விகிதங்கள் தேவைப்படுவதாக அனைத்துலக நிதியியல் செயற் குழு தெரிவித்தது. "பணமாற்ற விகிதங்களில் நிலையின்மை அதிகரித்தால், பொருளியல் நிலைத்தன்மை ஆட்டங்காணலாம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனவே, போட்டிபோடும் நோக்கத்துடன் நாங்கள் நாணய மதிப்புகளை மாற்றமாட்டோம்," என்று இந்தச் செயற்குழுவின் உறுப்பு நாடுகள் தெரிவித்தன. சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே வர்த்தக மோதலில் நாணய மதிப்பு குறித்த வேறுபாடும் அங்கம் வகிக்கிறது. சீனா போட்டிபோடும் மனப்பான்மையுடன் தனது நாணய மதிப்பை மாற்றுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.