பார்வை இழந்தவருக்கு வழிகாட்டும் குட்டி குதிரை

1 mins read
10de64d4-0d5b-4a29-a8a7-ecadbbbba222
-

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இந்தியர் முகம்மது சலீம் பட்டேல் தம் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்து வர, அவரின் தினசரி பணிகளில் வழிகாட் டுவதற்காக குட்டி குதிரை ஒன்று உதவிக்கரம் நீட்ட இருக்கிறது. இதுவே இங்கிலாந்து நாட்டில் நிகழவிருக்கும் முதல் சம்பவம். பிபிசி நிருபராகப் பணிபுரியும் 24 வயது திரு பட்டேல், கண் நோயால் பாதிக்கப்பட்டு தம் இடது கண்ணில் முற்றிலுமாக பார்வையை இழந்துவிட்டார். இப்போது வலது கண்ணில் சிறிதளவே பார்வை உள்ளதாகவும் அதுவும் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. நாய்கள் என்றால் இவருக்குச் சிறுவயதிலிருந்தே பயம் என் பதால் பார்வை இழந்தோருக்கான வழிகாட்டி நாய்களைப் பயன் படுத்த அஞ்சினார்.

அப்போதுதான் குட்டி குதிரை வகையை வழிகாட்டியாகப் பயன் படுத்தும் யோசனை அவருக்கு வந்தது. டிக்பி என்ற பெயர் கொண்ட அவ்வழிகாட்டி குதிரை இன்னும் குழந்தைதான் என்றும் அடுத்த ஆண்டு மே மாதத்தில் அதற்கு இரண்டு வயதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பிறகு, வழிகாட்ட அதற்கு அளிக்கப்படும் பயிற்சி மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கும். அது முடிவடைந்த பின்னரே அதைத் தாம் வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியும் என்று திரு பட்டேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

குட்டி குதிரை வகையைச் சேர்ந்த டிக்பிக்கு அதன் பயிற்றுநர் (வலது) வழிகாட்டுதல் தொடர்பான பயிற்சி அளிக்கிறார். படம்: சமூக ஊடகம்