கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஹில்டனின் உட்கூரை நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில் பங்ளாதேஷை சேர்ந்த பராமரிப்பு ஊழியர் 12 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தனது ஊழியர்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலை அமைத்துத் தர ஹில்டன் ஹோட்டல் தவறியிருந்தால் அதற்குப் பொறுப்பானவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று மலேசியாவின் தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகத்தின் தலைவர் திரு லீ லாம் தாய் தெரிவித்துள்ளார்.
"உயரமான இடத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை முதலாளிகளும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களும் வழங்க வேண்டும்," என்றார் திரு லீ.
நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் அந்த பங்ளாதேஷ் ஊழியர் உட்கூரையைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது இடிந்து விழுந்தது. சம்பவம் குறித்து முழுமையான அறிக்கைக்காகக் கழகம் காத்துக்கொண்டிருப்பதாக திரு லீ தெரிவித்தார். ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சியையும் பாதுகாப்புச் சாதனங்களையும் வழங்குவது முதலாளிகளின் பொறுப்பு என்று அவர் விவரித்தார்.
உட்கூரை இடிந்து 12 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தது. படம்: கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவு

