அங்காரா: செய்தியாளர் ஜமால் காஷோகி இரு வாரங்களுக்கு முன் மாயமான விவகாரம் தொடர் பில் நடத்தப்படும் விசாரணை யிலிருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்று சவூதி அரேபியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ நேற்று கூறினார். சவூதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுந்தபோது, திரு பொம்பியோ இதனைத் தெரிவித்தார். சவூதி மன்னரை ரியாத்தில் சந்தித்துப் பேசிய பொம்பியோ, தொடர்ந்து துருக்கியின் தலை நகரான அங்காராவுக்குப் பயணம் செய்து அதிபர் ரிசப் தயிப் எர்டோகனைச் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினார்.
இதன் தொடர்பில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் நெருங்கிய தொடர்புடைய ஓர் உயர் அதிகாரியின் மேற்பார்வையில் காஷோகியின் விசாரணை நடந்ததாக சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவிக் கப்பட்டது. சவூதி அரேபியாவின் பரம எதிரியான கத்தார் நாட்டுடன் காஷோகி தொடர்பு வைத்திருந் ததன் சந்தேகத்தின் பேரில் அவரை விசாரிக்க இந்த உயர் அதிகாரி 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத் திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. தம் துருக்கிய காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற அக்டோபர் 2ம் தேதி அன்று காஷோகி, துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்திற்குச் சென்றார். இருப்பினும் அவ்விடத்தை விட்டு அவர் வெளியேறாததாகவும் அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் அவரின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டதாகவும் துருக்கிய அதிகாரி ஒருவர், சிஎன்என்னிடம் கூறினார்.
காணாமல் போன ஜமால் காஷோகி. படம்: ரய்ட்டர்ஸ்

