கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் இந்நாள் அம்னோ தலைவருமான அகமட் ஸாஹிட் ஹமிடி மீது நீதிமன்றத்தில் நாளை குற்றம் சுமத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. திரு ஹமிடியின் குடும்பத் தினர் நடத்தி வரும் 'யயாசான் அக்காப் பூடி' எனும் தொண்டூழிய அறக்கட்டளையில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாகக் கூறி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், 55 வயதான ஹமிடி இன்று பிற்பகல் 3 மணிக் குள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் சரணடையுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. "திரு ஹமிடி வாக்குமூலம் அளித்த பிறகு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டப் பிரிவு 53ன்கீழ் அவர் கைது செய்யப்படுவார்," என்றும் தகவல் வெளியாகியுள்ள தாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது. அறக்கட்டளைக்குச் சொந்த மான 800,000 மலேசிய ரிங்கிட் (S$265,000) பணத்தை திரு ஹமிடியும் அவரின் மனைவியும் தங்களது கடனட்டைகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
2014க்கும் 2015க்கும் இடையில் இது நடந்ததாகக் கூறப்படுகிறது. மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின் ஊழல் தடுப்பு ஆணையம் ஹமிடியிடம் இதுவரை ஐந்து முறை விசாரணை நடத்தியுள்ளது.

