விமானியாகும் கனவு நிறைவேறாதவர் சொந்தமாக விமானத்தை உருவாக்கினார்

1 mins read

பெய்ஜிங்: விமானியாகும் கனவு பறிபோனாலும் அதை வேறு விதத்தில் நிறைவேற்றிக்கொண்டார் சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர். இப்போது சொந்தமாகவே ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார் அவர். ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை முன்மாதிரியாகக் கொண்ட இவ்விமானம் தற்போது வயல்கள் சூழ சிறு ஓடுபாதையில் நிற்கிறது. பள்ளிப்படிப்பை முடிக்க இயலாத ஸு யுவே வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறார். அவ்வப்போது அருகில் உள்ள சிறு தொழிற்சாலையில் பற்றவைப்புப் பணியிலும் ஈடுபட்டார். வாழ்க்கையில் விமானத்தை இயக்கும் ஆசை நிறைவேறாமலேயே போய்விடக்கூடும் என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது.

இதனால் சொந்தமாக ஒரு விமானத்தைத் தாமாகவே உருவாக்க முடிவெடுத்தார். 60 டன் எஃகைப் பயன்படுத்திச் சுமார் S$518,000 செலவில் விமான மாதிரியை அவர் உருவாக்கினார். தொழிலாளர்கள் சிலர் அவருக்கு உதவியாக இருந்தனர். விமானத்தினுள் வழக்கமாகப் பொருத்தப்படும் 156 இருக்கைகளுக்குப் பதிலாக 36 பேர் அமரும் முதல் வகுப்பு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த விமானத்தை உணவகமாக மாற்ற ஸ` யுவே திட்டமிட்டுள்ளார்.