இலங்கை அரசியலில் தொடரும் நெருக்கடிக்குத் தீர்வு காண உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சிகளும் வெளிநாடுகளும் அறிவுறுத்தி வரும் வேளையில், 16ஆம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாது என்று அரசின் புதிய பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ஆகியோரை சிறிசேன நேற்று முன்தினம் இரவு சந்தித்தார். அப்போது நாட்டின் அரச மைப்பை மதிக்கும் தீர்வு விரைந்து காணப்படவேண்டும் என்று அவர் கள் வலியுறுத்தினர். எனினும், நவம்பர் 16ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ள அதிபர் சிறிசேன, முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில்லை என்று தீர்மான மாக உள்ளார்.
ஆனால், அதிபரின் அனுமதி இல்லாமலேயே முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டலாமா என சபாநாயகர் கரு ஜெயசூரியா ஆலோசித்து வருகிறார். நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற் கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பது என நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் குழு கூட்டத் தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் பான்மை பெற சிறிசேன தரப்புக்கு இன்னும் 18 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
சிறிசேனவும், ரணிலும் நாடாளு மன்றத்தில் சம பலத்துடன் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பும் உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்குத் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளன. தங்களுக்கு ஆதரவு தரும் கட்சித் தலைவருக்கு 500 மில்லியன் ரூபாயும் ($3.95 மி.) அமைச்சர் பதவி வகித்தவருக்கு 300 மில்லியன் ரூபாயும் ($2.37 மி.) தருவதாக சிறிசேன தரப்பு பேரம் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கூறியுள்ளார்.

