இந்தோனீசிய விமானத்தின் பெரிய பகுதி கண்டுபிடிப்பு

1 mins read
6277e055-8e5c-42dc-aff5-39f1e447d20b
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா கடல் பகுதியில் திங்கட்கிழமை விழுந்து நொறுங் கிய லயன் ஏர் நிறுவன விமானத் தின் பெரிய பகுதியை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்திருப்பதாக இந்தோனீசிய ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். விமானம் விபத்துக்குள்ளான இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த விமானத்தின் நடுப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சோனார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டறிந்து விட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர் என்று ராணுவத் தலைவர் ஹாடி ஜாஹியாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை பின்னேரம் கடலுக்கு அடியில் 35 மீட்டர் ஆழத்தில் மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு வின் துணைத் தலைவர் ஹார்யோ சட்மிகோ கூறினார். அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் முக்குளிப்பாளர்கள் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்றுள்ள தாகவும் அவர் சொன்னார். திங்கட்கிழமை மொத்தம் 189 பேருடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மேற்கு ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் சென்ற பயணிகள் மற்றும் சிப்பந்திகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

விமானத்தில் சென்ற பயணிகள் கொண்டுசென்ற பொருட்களை உறவினர் ஒருவர் அடையாளம் காண முயற்சி செய்கிறார். படம்: ஏஎஃப்பி