காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அந்த ஹெலிகாப்டரில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர் நேற்று விழுந்து நொறுங்கியதாக வும் மோசமான பருவநிலை விபத்துக்குக் காரணம் என்றும் மாநில ஆளுநரின் பேச்சாளர் கூறியுள்ளார். அந்த ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தாங்களே என்று தலிபான் போராளிகள் குழு அறிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் சென்ற 23 ராணுவ அதிகாரிகளும் இரு விமானிகளும் விபத்தில் உயி ரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் பாது காப்புப் படையினர் மற்றும் காவல் துறையினரை குறிவைத்துப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காபூல் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச் சாலைக்கு அருகே அரசாங்க ஊழியர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். சிறைச்சாலை ஊழியர்கள் நேற்று பணிக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது திடீரென அந்த வாகனத்தை நோக்கி வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் இருந்த ஊழியர்களில் 7 பேர் உயிரிழந்ததாக அப்பேச்சாளர் சொன்னார். 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக போலிசார் கூறினர். தாக்குதலில் சிறைச்சாலை வாகனமும் சேதம் அடைந்தது. அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

