இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக் கப்பட்டிருந்த கிறிஸ்துவப் பெண் அசியா பீபி புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரு கின்றன. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்லாமாபாத் நெடுஞ்சாலை மற்றும் கராச்சி நகர சாலைகளில் சாலை மறியல் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். இந் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதி காக்குமாறு போராட்டக்காரர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். அரசுக்கு எதிரான நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக பொதுமக்களைத் தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அசியா தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது முகம்மது நபியைத் தரக் குறைவாகப் பேசியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அசியா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

