ஜகார்த்தா: இந்தோனீசிய கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியை முக்குளிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் குப்பைகளுக்கு இடையில் கறுப்புப் பெட்டி கிடைத்ததாக அதனைக் கண்டு பிடித்த ஹென்டிரா என்ற முக்குளிப்பாளர் செய்தியாளர் களிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி க ண் டு பி டி க் க ப் ப ட் டி ரு ப் ப த ன் மூலம் இனி விமானத்துறை பாதுகாப்பு நிபுணர்கள், விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய ஆய்வு செய்யத் தொடங்குவர்.
அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அதன் கடைசி தருணங்கள் எப்படி இருந்தன என்பதைக் கண்டறியும் பணியில் நிபுணர்கள் ஈடுபடுவர். முழுமையான ஆய்வுக்குப் பிறகே விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தெரிய வரும் என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். மலிவுக் கட்டண விமானச் சேவை வழங்கி வரும் லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை ஜகார்த்தா விலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் சென்ற பயணிகள், சிப்பந்திகள் உட்பட மொத்தம் 189 பேரும் விபத்தில் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை சடலங்கள் எதுவும் மீட்கப்படாத நிலையில் விபத்தில் இறந்த வர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேசிய மீட்பு அமைப்பின் தலைவர் முகம்மது சயஜி செய்தியாளர்களிடம் காண்பிக்கிறார். படம்: இபிஏ

