பிரிட்டன் வெளியேற்றம்; புதிய அமைச்சர் நியமனம்

பிரிட்டன் வெளியேற்றம்; புதிய அமைச்சர் நியமனம்

2 mins read

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது தொடர்பில் அந்த அமைப்புடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே செய்துகொண்ட உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை யிலிருந்து சிலர் பதவி விலகியுள்ள நிலையில் மேலும் பல சிக்கல்களை பிரதமர் எதிர்நோக்குகிறார். பிரெக்ஸிட் விவகாரத்தை கவனித்து வந்த டோமினிக் ராப் பதவி விலகியதைத் தொடர்ந்து இளைய சுகாதார அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியேற்றம் தொடர்பில் பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்தை அறிய 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஸ்டீபன் பார்க்லே. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான பிரிட்டனின் எதிர்கால உறவு குறித்து அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் திருவாட்டி மே கவனம் செலுத்தும் நேரத்தில் பிரிட்டன் வெளியேறுவதற்கான ஆயத்தம் குறித்த உள்நாட்டுப் பணிகளை பார்க்லே கவனிப்பார் என்று பிரதமரின் பேச்சாளர் கூறினார்.

முன்னாள் வங்கி நிர்வாகியான 46 வயது பார்க்லே முன்னதாக நிதி சேவைத்துறை அமைச்சராக பணியாற்றி யிருக்கிறார். பிரிட்டன் வெளியேற்றம் தொடர்பில் தெரேசா மே அறிவித்த செயல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை மற்றும் ஓய்வூதிய விவகாரங்களை கவனித்து வந்த அமைச்சர் எஸ்டர் மெக்வே பதவி விலகினார். அதனால் முன்னாள் உள்துறை அமைச்சர் அம்பெர் ருட் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். பிரெக்ஸிட் உடன்பாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பிரதமர் தெரேசா மே பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது.