காஷோகியின் வேதனையைக் கேட்க விரும்பவில்லை: டிரம்ப்

காஷோகியின் வேதனையைக் கேட்க விரும்பவில்லை: டிரம்ப்

1 mins read

வா‌ஷிங்டன்: செய்தியாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட ஒலி நாடா பற்றி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை நேரடியாகக் கேட்க விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார். "ஒருவர் வேதனைப்படும் குரல், அது ஒரு பயங்கரமான ஒலிப்பதிவு, வன்முறைகள் நிறைந்த கொடூர மானது," என்று ஃபாக்ஸ் நியூஸ் சண்டேவுக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் சொன்னார்.

அக்டோபர் 2ஆம் தேதி இஸ் தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் காஷோகியைக் கொல்ல சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார் என்று சிஐஏ விசாரணையில் தெரி விக்கப்பட்து. என்றாலும் சவூதி பட்டத்து இளவரசர் மீது அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்ட வில்லை. சென்ற சனிக்கிழமை பேசிய டிரம்ப், "இந்த விவகாரத்தில் விரைவில் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்," என்றார்.

பட்டத்து இளவரசர் முகமது தமக்கு தொடர்பு இல்லை என்று உங்களிடம் பொய் சொன்னாரா என்று டிரம்ப்பிடம் கேட்டதற்கு "எனக்குத் தெரியவில்லை, யாருக்குத் தெரியும், அவருக்கு ஏராளமான ஆட்கள் உள்ளனர். அவருக்குத் தெரியாது என்று சொல்கின்றனர். காஷோகியின் கொலைச் சம்பவத்தில் நான் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்று அவர் கூறுகிறார்," என்றார். ஆனால் பட்டத்து இளவர சருக்கு நெருக்கமானவர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என் பதை அதிபர் ஒப்புக்கொண் டார்.