பெய்ஜிங்: அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சு இரு நாடுகளுக்கும் ஆதாயம் தருவதாக இருக்க வேண்டும் என்றும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றும் சீனாவின் வர்த்தக துணை அமைச்சர் வாங் ஷோவென் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வழிகளை கண்டறிய முடியும் என்று தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இம்மாதம் 30ஆம் தேதி அர்ஜெண்டினாவில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள வேளையில் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவுடன் நிலவும் வர்த்தகப் பூசல் முடிவுக்கு வர அந்நாட்டுடன் உடன்பாடு செய்துகொள்ள வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். அத்தகைய உடன்பாடு செய்துகொள்ள சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார்.

