கராச்சியில் சீனத் தூதரகம் மீது தாக்குதல்; இருவர் பலி

1 mins read

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத் தின் மீது துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று துப்பாக்கிக்காரர்களும் போலிசாரால் சுட்டுக்கொல்லப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். துப்பாக்கி ஏந்திய நால்வர் நேற்று துறைமுக நகரான கராச்சியில் உள்ள சீனத் தூதரகத்திற்குள் நுழைய முயன்றபோது ஒரு சோதனைச் சாவடியில் அந்த துப்பாக்கிக் காரர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதாக மூத்த போலிஸ் அதிகாரி ஜாவைட் அலம் முன்னதாகக் கூறினார்.

அந்த இடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிக் காரர்களுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. சீனத் தூதரகத்தின் மீது துப்பாக்கிக் காரர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு போலிஸ்காரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் ஒரு போலிஸ்காரர் கடுமையாகக் காயம் அடைந்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி கூறினார். துப்பாக்கிக்காரர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக முன்னதாக அந்த அதிகாரி கூறியிருந்தார். பின்னர் வெளியான தகவலின் படி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் போலிசார் சுட்டுக் கொன்றாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும் தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.