கோலாலம்பூர்: நாட்டில் இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் அண்மையில் கருத்து தெரிவித்தது தொடர்பில் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி, பிரதமர் அலுவலக அமைச்சர் பி.வேத மூர்த்தி உட்பட 9 பேரின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக காவல் துறையினர் விரைவில் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பவுள்ளனர். புக்கிட் அமானில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது காவல்துறை துணைத் தலைவர் நூர் ரஷித் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
காவல் துறையினருக்கு வந்த 160க்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் மிக விரைவில் அவர்களை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். காவல் துறையினருக்கு வந்த புகார்களில் முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் பற்றிய புகாரும் அடங்கும் என்று அவர் கூறினார். பேச்சு சுதந்திர உரிமைக்கு போலிசார் மதிப்பு கொடுப்பதாக அவர் சொன்னார். இருப்பினும் அந்த உரிமை சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு, மற்றும் நாட்டின் பாதுகாப்பு கட்டிக்காக்கப்படுவதை உறுதிப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க போலிசார் தயங்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐநா மனித உரிமை உடன் பாட்டை அங்கீகரிக்கும் தற் போதைய மலேசிய அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மலேசியாவில் அண்மைய வாரங்களாக பதற்றம் நீடிக்கிறது.

