பக்கத்தான் மீது பெர்சே சந்தேகம்

பக்கத்தான் மீது பெர்சே சந்தேகம்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் தேர்தல் முறையிலும் நிர்வாகக் கட்டமைப்பிலும் சீர்திருத்தங்களைச் செய்வதில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கும் பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கும் கடப்பாடு உள்ளதா என்று பெர்சே 2.0 கேள்வி எழுப்பியுள்ளது. பெர்சாத்து கட்சி, தனது தலைவர்களுக்கு இன்னும் அதிகமாக வளங்களைத் தந்து எப்படியேனும் அவர்களை அடுத்த தேர்தலில் வெற்றியடையச் செய்யவேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அப்துல் ர‌ஷித் அப்துல் ரஹ்மான் நேற்று அக் கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது கூறினார்.

இவரது கூற்று அதிர்ச்சிக்குரியது என்று பெர்சே 2.0 நேற்று வெளி யிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "ஏழு மாதங்களுக்கு முன்னர் மலேசிய மக்கள் அம்னோ கட்சியை நிராகரித்தது ஏன் என்பதை அப்துல் ர‌ஷித்தும் அவருக்காகக் கூப்பாடு போடும் பேராளர்களும் மறந்துவிட்டார்களா?" என்று தேர்தல் சீர்திருத்த ஆர்வலர் குழுவான பெர்சியின் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அரசாங்க நிர்வாகம் என்பது வெகுமதி அல்ல என்றும் மக்களால் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் பொறுப்பு என்றும் பெர்சே கூறியது.