கோலாலம்பூர்: சிலேத்தார் விமான நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டு உள்ள விமானப்பாதைகள் (ஐஎல்எஸ்) தொடர்பில் ஜொகூரின் பாசிர் கூடாங் துறைமுகத்திற்கு எவ்வித பாதுகாப்பு அபாயமும் ஏற்படாது என்று சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் வலியுறுத்தியுள்ளார். சிலேத்தார் விமான நிலையத் திலிருந்து பயணம் செய்யக்கூடிய விமானப்பாதைகளை விமானி களுக்குப் பரிந்துரை செய்யும் வகையில் இந்த ஐஎல்எஸ் அமைந்திருக்கும். அத்துடன் விமானம் ஓட்டும்போது விமானியால் தெளிவாகப் பார்க்க முடியாத நிலையில் விமானத்தைத் தரையிறக்க ஐஎல்எஸ் பெரிதும் கைகொடுக்கக் கூடியது. மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இவ்விவகாரம் தொடர்பில் நேற்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து திரு கோ இவ்வாறு பதிலளித்திருந்தார்.
அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் தேதியன்று நடப்புக்கு வரவிருக்கும் ஐஎல்எஸ் முறை குறித்து வந்த அறிவிப்பை மீட்டுக்கொள்ளுமாறும் சர்ச்சைக்குரிய விமானப்பாதைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் திரு லோக் கேட்டுக் கொண்டார். தற்போது திட்டமிடப் பட்டுள்ள ஐஎல்எஸ் விமானப் பாதைகள் அனுமதிக்கப்பட்டால் பாசிர் கூடாங், ஜோகூர் ஆகிய இடங் களில் மலேசியா உயர்மாடிக் கட்டடங்களைக் கட்ட முடியாது என்றும் இதனால் பாசிர் கூடாங் தொழிற்பேட்டை வட்டாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சி பாதிப்படையும் என்றும் அவர் சொன்னார்.

